01

முதல் கோணல்...

மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, க்ரோம்பேட்.

இறுதியாண்டு மாணவர்களுக்கு, கேம்பஸ் இண்டர்வியூ என்படும் கள நேர்காணல் நடந்துகொண்டிருந்தது கல்லூரியில்.

நாசா முதல் நம்மூர் கம்பெனிகள் வரை, இந்தியர்களின் இயந்திரமூளை பற்றிய பெருமைகளை அறிந்திருந்தன. கல்லூரியிலேயே வந்து இளம் இந்திய மூளைகளைத் தங்கள் நிறுவனத்துக்காக வளைத்துப்போடும் வேலையை அனைவருமே முண்டியடித்துக்கொண்டு செய்தாலும், அவர்கள் எதிர்பார்க்கும் அறிவும் ஆற்றலும் கொண்ட பணியாளர்களாகக் கிடைக்க, ஆயிரத்தெட்டு சல்லடைகளில் சலித்தெடுத்த பின்னரும் ஆறாமல், நான்கைந்து நேரடி கேள்வி-பதில் சுற்றுக்களை வைத்துத்தான் தேர்ந்தெடுக்கின்றனர்.

அதிலும் எம்ஐடி போன்ற மாபெரும் கல்லூரிகளுக்கான சல்லடைகள், சராசரியைக் காட்டிலும் கடினமானவை என்பது தமிழகமே அறியும். கேம்பஸ் இண்டர்வியூவிலேயே வேலை வாங்கிக்கொண்டால் மட்டுமே பொறியாளர்களுக்கு வாழ்வு. ஏனெனில் வேலைதேடல் என்னும் மாபெரும் சமுத்திரத்தினுள் ஒருமுறை விழுந்துவிட்டால் மீண்டு எழுவதற்கு ஒரு ஆயுள் போதாது. ஏனெனில் காலம்கடந்தபின்னர் வேலைகள் அரிது. அப்படி ஒருவேளை வேலை கிடைத்தாலும், படித்த படிப்பிற்கு சம்பந்தமே இல்லாமல், கடைநிலை வேலைகள் மட்டுமே கிடைக்க சாத்தியம். எனவே இன்று ஒரு வேலையைக் கைப்பற்றிவிட வேண்டியது அத்தியாவசியம் மட்டுமல்ல, லட்சியம்.

மனதில் இத்தகைய எண்ணங்கள் இடைநில்லாமல் ஓடிக்கொண்டிருக்க, பதற்றப் பெருமூச்சுகளுடன் தன்னை சமன்படுத்திக்கொள்ள முயன்றவாறு சுவரோடு சாய்ந்து முதுகில்லாத நாற்காலியில் அமர்ந்து காத்திருந்தாள் சம்யுக்தா. அவள் காத்திருந்த கதவின்மீது, "Astro Aviation" என்கிற பெயர்ப்பலகை அகங்காரமாக மிளிர்ந்தது.

"ஆஸ்ட்ரோல மட்டும் வேலை கிடைச்சிட்டா போதும். முழு எதிர்காலமும் சேஃப். வேலை மட்டும் தராம, குடியிருக்க அவங்க கேம்பஸ்லயே வீடு, ட்ராவல் பண்ண காரு, குழந்தைங்க பிறந்தா அவங்களுக்கு ஸ்கூல், ஹாஸ்பிடல்னு, மொத்த வாழ்க்கைக்கும் அவங்களே கேரண்டி! ஒரு ஜூனியர் என்ஜினியரா வேலை கிடைச்சாக்கூட ஓகே தான்! அதைத்தான் வேண்டிட்டு இருக்கேன் நான்..."

தன்னருகில் அமர்ந்திருந்த வாலிபன் ஒருவன் கைபேசிக்குள் கிசுகிசுக்க, அவனது வேண்டுதலோடு தனக்கும் ஒரு விண்ணப்பத்தை மனதுக்குள் சமர்ப்பித்துக்கொண்டாள் சம்யுக்தா.

'ஒரேயொரு வேலை. சின்ன போஸ்ட்டா இருந்தாலும்கூட ஓகே. சாயங்காலம் அப்பா கூப்பிடும்போது சந்தோஷமா இந்த செய்தியை அவர்கிட்ட சொல்லற அருகதையைக் கொடு ஆண்டவா..!'

அவள் வேண்டுதலைப் பாதியிலேயே இடைவெட்டி, "நெக்ஸ்ட் நீங்க போலாம்." என அவளை உள்ளே அனுப்பினார் உதவியாளர்.

ஒருமுறை தனது உடையை சரிபார்த்து நேர்ப்படுத்திக்கொண்டு, தலையையும் கையால் அழுத்திவிட்டுக்கொண்டு, முகத்தில் தன்னம்பிக்கையான புன்னகையைத் தோற்றுவித்துக்கொண்டு, கதவைத் திறந்து உள்ளே கால் வைத்தாள் சம்யுக்தா.

வெளியிலிருந்த சுள்ளென்ற வெய்யிலுக்கு முரணாய், உள்ளே ஏசிக்காற்று அவளைத் தழுவ, இதமான அந்த உரசலை ஏற்றுக்கொண்டு நடந்து, தன்னெதிரே இருந்த மேசையின் மறுபுறம் அமர்ந்திருந்தவர்களைத் தலையசைத்து வணங்கினாள் அவள்.

"குட்மார்னிங் ஜெண்டில்மென்."

"குட்மார்னிங் மிஸ். ப்ளீஸ் சிட்."

தனது சான்றிதழ்கள் அடங்கிய கோப்பை அவர்களிடம் வைத்துவிட்டு, தனக்கெனப் போடப்பட்டிருந்த நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்தாள் அவள். கைகளை மடிமீது வைத்துக்கொண்டவளுக்கு, காலை கிளம்பும்போது அறைத் தோழி சொன்னவை நினைவில் கேட்டன.

"உட்காரும்போது அழகா உட்காரு. சேரைப் திரும்பிப் பாக்காம, பாலிஷா ஒரே மோஷன்ல உக்காரணும். கையைத் தொங்கப் போடக்கூடாது, அதேசமயம் கட்டவும் கூடாது. மடியில வச்சுக்க, பெட்டரா இருக்கும். கேக்கற கேள்விக்கு பதிலை சொல்லுறப்ப, கையை ஓவரா ஆட்டக்கூடாது. ரைட் ஹேண்டை மட்டும் அளவா யூஸ் பண்ணணும். தண்ணி கிண்ணி எடுத்துக் குடிச்சிடாத, ட்ரெஸ்ல சிந்திடுச்சுன்னா அசிங்கமா இருக்கும். முடிஞ்சவரை சத்தமில்லாம மூச்சு விடு. இருமல், தும்மல் எதுவும் வந்தா அடக்கிக்கோ. உனக்கு சொல்லத் தேவையில்ல சம்யூ, இருந்தாலும் கவனமா இரு."

இப்பொழுது பார்த்துக் கொட்டாவி வரும்போல் இருந்தது. மனதுக்குள் சலித்துக்கொண்டு எச்சில் விழுங்கி அவற்றை அடக்க முயன்றாள் அவள்.

அவளது தரவுகளைப் படித்துவிட்டு நிமிர்ந்தார் நடுநாயகமாக அமர்ந்திருந்த மனிதர். ஃபைலை அடுத்தவரிடம் நீட்டிவிட்டு சம்யுக்தாவை நோக்கினார்.

"நல்ல மார்க்ஸ், குட் க்ரேட்ஸ். ஆனா எல்லாமே ஜஸ்ட் எபவ் ஆவரேஜ். எங்களுக்கு எண்பது பர்சண்ட் வேணும்னு கேட்டா, நீங்க கரெக்டா எண்பது மட்டும்தான் வாங்கியிருக்கீங்க. சொல்லப்போனா, ஜஸ்ட் பாஸ் மாதிரின்னு வச்சுக்கலாம். எங்ளோட ரிட்டன் ரவுண்ட்ல நல்லா பண்ணியிருக்கீங்க, ஆனா ஏன் காலேஜ் எக்ஸாம்ஸ்ல பண்ணலை மிஸ்.சம்யுக்தா?"

லேசாக செருமிக்கொண்டவள், "சார், it's because I had a lot on my plate. போன வருஷத்துல இருந்து மாணவர் சங்கத்தோட ஜெனரல் செக்ரட்டரி நான்தான். அதுமட்டும் இல்லாம, ஆல் இண்டியா இன்ஜினியரிங் ஸ்டூடண்ட்ஸ் கன்வீன்ல, நானும் ஒரு முக்கிய மெம்பர். க்ளாஸ் ரெப், கேர்ள்ஸ் ஹாஸ்டல் இன்சார்ஜ்... இதுமாதிரி இன்னும் பல. சோ, படிக்கறதுக்குன்னு நிறைய டைம் ஒதுக்க முடியாத சூழ்நிலை.." என விளக்கிட முயன்றாள்.

இடப்புறம் அமர்ந்திருந்த மனிதர் நடுவில் வந்து, "உங்க லீடர்ஷிப் குவாலிட்டி எங்களுக்குப் புரியுது. ஆனா, அதன் காரணமா வேலைல கவனக்குறைவா இருக்கமாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?" என்றார்.

சம்யுக்தா வறட்சியாகப் புன்னகைத்தாள்.

"கம்பெனிக்கும் காலேஜுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கறதா நான் நம்புறேன் சார். எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சின்சியரா செய்யுற பழக்கம் எப்பவுமே இருக்கும் சார். இதுக்குமேல, ஜஸ்ட் கொஞ்சம் நம்பிக்கை மட்டும் என்மேல வச்சீங்கனா, உங்களுக்கு ஒரு நல்ல அசெட் கிடைக்கும்; எனக்கும் ஒரு நல்ல வேலை கிடைக்கும்."

தங்களுக்குள் விவாதித்துக்கொண்டனர் கேள்வியாளர்கள்.

"கம்பெனிக்கு உங்களோட அடிஷன் என்னவா இருக்கும்?"

"ஒரு திறமையான பெண் இன்ஜினியர். விமானங்களுக்கான புதுப்புது ஐடியாக்கள். பணிச்சூழலை ஈஸியாக்க நிறைய ஜோக்ஸ்."

அனிச்சையாக சிரித்தனர் அனைவரும்.

அதுவரை அமைதியாக இருந்த வலப்புற மனிதர் அவளிடம், "வெல் மிஸ்.சம்யுக்தா, உங்க ரிப்போர்ட்ல, மூணாவது வருஷ மார்க்ஸ்ல, ஒரு சப்ஜெக்ட்ல ஃபெய்ல் ஆகி, அரியர் எழுதியிருக்கீங்க. அது ஏன்னு சொல்ல முடியுமா?" என்க, அதுவரை இருந்த நல்லிணக்கம் பறிபோனதுபோல் ஆனது.

அறையின் குளிர் பாதங்களைத் தீண்டி உறையவைக்க, முன்னே இதமாக இருந்தது இப்போது தொந்தரவாகத் தெரிந்தது.

உதடுகளை லேசாக ஈரப்படுத்திக்கொண்டு, "காலேஜ்ல படிக்கற வசதியற்ற பின்னணியிலான மாணவர்களுக்கு, அரசு தர்ற உதவித்தொகை பாதியை காலேஜ் ஆபிசர்ஸ் காரணமே இல்லாம கமிஷனா எடுத்துக்கறதை எதிர்த்துப் போராட்டம் நடத்தினோம். அப்போ காலேஜோட அமைதியை குலைச்சதா சொல்லி ரெண்டு வாரம் சஸ்பெண்ட் பண்ணாங்க சார். அதனால எக்ஸாமை அட்டெண்ட் பண்ண முடியாம போயிடுச்சு." என்றாள் உணர்வற்ற குரலில்.

இப்போது மூவர் முகத்திலும் கேள்விக்கோடுகள். அதிருப்தியோடு அவளிடம் திரும்பி, "நீங்க போகலாம். நாங்க டிசைட் பண்ணிட்டு, உங்களுக்கு மெயில் பண்றோம்." என்றார் இடது சீட்டுக்காரர். முகத்தில் வாட்டத்தைக் காட்டாமல் புன்னகைத்துவிட்டு எழுந்து வெளியே வந்தாள் சம்யுக்தா.

.

.

"அவ்ளோதான் கேட்டாங்களா? சப்ஜெக்ட்ட பத்தி ஒண்ணும் கேக்கலையா?"

சகாக்கள் அவளை சூழ்ந்துகொண்டு துளைத்தெடுக்க, சோர்வாகத் தலையசைத்தாள் சம்யுக்தா.

"ப்ரொடெஸ்டை பத்தி சொன்னதும் வெளியே அனுப்பிட்டாங்க."

பரிதாபமாக அவளைப் பார்த்தனர் அவர்கள்.

"நம்ம லீடருக்கே கேம்பஸ்ல வேலையில்லைன்னா கேக்க நல்லாயிருக்காது சம்யூ. ஆஸ்ட்ரோவே தான் வேணுமா? வேற எதாவது இண்டர்வியூவுக்கு போயேன்... நிறைய கம்பெனி இருக்காங்கல்ல? என்ன, நம்ம படிச்சதுக்கு சம்பந்தமில்ல, அதனால என்ன? முதல்ல ஒரு வேலையை வாங்கிட்டு, அப்பறமா மத்ததை யோசிக்கலாம்."

"ம்ஹூம். அவங்க அப்புறமா சொல்றோம்னு தானே சொன்னாங்க, எனக்கு நம்பிக்கை இருக்கு. வெய்ட் பண்ணிப் பார்க்கலாம்."

"ப்ச், குருநாத்தை பாரு, யூகேர் கம்பெனில அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரே வாங்கிட்டான். இன்னும் நம்ம க்ளாஸ் பசங்களே ஏகப்பட்ட சாப்ட்வேர் கம்பெனியில லெட்டர் வாங்கிட்டாங்க. நீதான் இப்டி, படிச்ச படிப்புக்கேத்த வேலைதான் வேணும்னு நிக்கற!"

"அது ஒண்ணும் தப்பில்லையே. காத்திருக்கறவங்களுக்குத்தான், நல்ல விஷயங்கள் எல்லாம் கிடைக்கும்."

"இதைத்தான் சாயங்காலம் உங்கப்பாகிட்ட சொல்லப் போறயா?"

தோழி ஒருத்தி கேட்கவும் சம்யுவின் முகம் வாடியது. தந்தையை நினைத்தபோது தொண்டைக்குழியில் கனம் இறங்கி, கண்கள் கலங்கின. கூட்டத்தைவிட்டு விலகிச்சென்று மைதானத்தின் பார்வையாளர் பகுதிக்குச் சென்று மரத்தடியில் தனிமையில் அமர்ந்தாள் அவள்.

மனது ஸ்ரீரங்கத்தைக் கொணர்ந்தது கண்முன்.

ஒண்டுக் குடித்தன வீட்டில் இருபது வருடங்களாகக் காலம் கடத்தும் தந்தையும், முன்னறையில் புகைப்படமாகச் சிரித்துக்கொண்டிருக்கும் அன்னையும் அவளை எதிர்பார்த்தே காத்திருப்பதுபோல் இருந்தது.

பெருமூச்சு விட்டவள் தனக்குள் சமாதானம் பேசிக்கொண்டாள்.

'ஆஸ்ட்ரோல அப்ளை பண்ணினதே என்னோடு சேர்த்து பத்துப் பேர் தான். அவங்க இண்டர்வியூ நடத்துறதே தமிழ்நாட்டுல நாலு காலேஜ்ல தான். நமக்கு கிடைச்சிடும் கண்டிப்பா.'

போலியான நம்பிக்கைதான் என்றாலும் அந்நேரத்தில் ஆறுதலாக இருந்தது அது. மதிய வெய்யில் உச்சியில் அடித்தாலும், ஏனோ பசியே இல்லாத உணர்வு. மரத்தின் நிழல்கள் மெல்லமெல்லச் சாய்வதைப் பார்த்தவாறே நேரம் போவது தெரியாமல் அங்கேயே உட்கார்ந்திருந்தாள் அவள். சுற்றிலும் நடந்துசெல்லும் மாணவர் கூட்டமோ, குழல் கலைக்கும் வெப்பக்காற்றோ, அவ்வப்போது பறக்கும் தூசியோ, எதுவுமே அவளது கவனத்தைத் தொட இயலாமல் தோற்றன. அவற்றைப் புறந்தள்ளிவிட்டு, ஒரே கணத்தில் அவளது கவனத்தைத் தன்புறம் குவித்தது கைபேசி.

சட்டென அழைப்புச் சத்தத்தில் சுயநிலைக்கு வந்தவள், பதற்றமாக அதை எடுத்தாள்.

'கடவுளே.. அப்பாவா இருக்கக் கூடாது.. அப்பாவா இருக்கக்கூடாது... ப்ளீஸ்...'

இந்த வேண்டுதல் பலிக்கவில்லை.

அழைத்திருந்தது அவளது தந்தையே தான்.

"சம்யு கண்ணா! எப்படிடா இருக்க? கேம்பஸ் இண்டர்வியூன்னு சொன்னியே.. எப்படி நடந்தது? நீ நல்லா பண்ணியா? வேலை கிடைச்சிடுச்சா?"

அப்பாவின் ஆர்வமான கேள்விகளுக்கு உண்மையைச் சொல்லி அவரை சங்கடப்படுத்த விரும்பவில்லை சம்யுக்தா. எனவே முயன்று குரலில் ஒரு உற்சாகத்தைத் தோற்றுவித்துக்கொண்டு,

"ஓ!! நல்லா பண்ணேன்ப்பா. ஆஸ்ட்ரோ கம்பெனியில, சீக்கிரமா கூப்பிடறோம்னு சொல்லியிருக்காங்க. கால் லெட்டர் கிடைச்சிடும். எல்லாம் நல்லபடியா தான்ப்பா நடக்கும்." என உறுதியளிக்க, அவர் குரலும் மலர்ச்சியானது.

"சந்தோஷம்டா. நான் ரங்கநாதர்கிட்ட வேண்டிக்கறேன்.. கண்டிப்பா பெரிய்ய வேலை கிடைக்கும். கண்டிப்பா நல்ல நிலமைக்கு வந்துடுவோம் நாம.."

"ம்ம், ஆமாப்பா." கவலை தொண்டைக்குள் கல்லாக இறங்கியது.

"சந்தோஷம்டா. உடம்பைப் பாத்துக்க. நல்லாப் படி. எல்லாம் நல்லாவே நடக்கும். சரிடா.. வச்சிடறேன்.."

"சரிப்பா.. நீங்களும் உடம்பைப் பாத்துக்கங்க, நேரத்துக்கு சாப்பிடுங்க. வச்சிடறேன்."

பெருமூச்சோடு கைபேசியை அணைத்துவிட்டு எழுந்து நடந்தாள் அவள். மாணவர்கள் முன்னும் பின்னும் சென்றவண்ணம் இருந்தனர். நேர்காணல் அறைகளைச் சுற்றி இன்னும் கூட்டம் குறையவில்லை.

வகுப்பறைப் பக்கம் போகவில்லை கால்கள். அவைபாட்டில் கல்லூரியை விட்டு வெளியே நடக்க, அவளும் தடுக்காமல் கால்போன போக்கில் நடந்தாள். சாலைகளில் செல்லும் வாகனங்களின் சத்தமெல்லாம் இம்மியும் அசைக்கவில்லை அவளை. காதுகளில் அவை விழுந்ததா என்பதே சந்தேகம்தான். கண்கள் நேராகப் பார்த்தாலும், பார்வை எதுவும் பதியவில்லை.

கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் ஏதேதோ சாலைகளில் நடந்தவள், எங்கெங்கேயோ திரும்பி, இறுதியாக தாம்பரம் மின்சார இரயில் நிலையத்தில் வந்து நின்றாள்.

*******

Write a comment ...

Madhu Manohar

Show your support

I need to get away from my parent's house and follow my passion. So I kinda need to sell books for my expenses. Being 23 years old and asking your parents for money is, well, simply put, HELL.

Write a comment ...