தாம்பரம் எலெக்ட்ரிக் ஸ்டேஷன்.
வந்துசெல்லும் ரயில்களை வேடிக்கை பார்த்தபடி தூணோரமாய் சாய்ந்தாள் சம்யுக்தா. கண்கள் கரித்தன. ஆனாலும் அழ விரும்பாதவளாய் வெறித்த பார்வையோடு ரயில்களையே முறைத்தாள்.
'நான்கு வருடங்களாக உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்துப் படித்த படிப்பு. அதற்கு நான்கு நிமிடத்தில் முற்றுப்புள்ளியா?? மாணவர்களின் அடிப்படை உரிமைகளைக் கோரிய குற்றத்திற்காகவா இந்தத் தண்டனை?? பொதுநலச் சிந்தனையால் வாழ்க்கை போய்விட்டதெனச் சொன்னால் யாரேனும் நம்புவார்களா?
இனி எந்த நிறுவனத்தில் விண்ணப்பித்தாலும் இதே நிலை தானே? இதே கேள்விகள். இதே பதில்கள் தான்.
அடுத்த முறை காய்ச்சலென்று சொல்லிப் பார்ப்போமா? ம்ஹூம். கல்லூரி நிர்வாகத்தினரிடம் ஒருமுறை கேட்டால் உண்மை வெளிவந்துவிடும். அவமானம் தான் மிஞ்சும் பின்னர்.
உண்மையைச் சொல்லி இந்த ஜென்மத்தில் வேலை வாங்கிவிட முடியுமா? மூன்றாமாண்டு மதிப்பெண்களால் எடைபோடப்பட்டு நிராகரிக்கப்படவேண்டும் என்பதுதான் நமக்கு எழுதப்பட்ட விதியோ??'
கண்ணிலிருந்து ஒரு துளிக் கண்ணீர் கிளம்ப, தடுத்துத் துடைத்துவிட்டு மீண்டும் நேராக வெறித்துப் பார்த்தாள் அவள்.
எதிரில் இருந்த நடைமேடை காலியாக இருந்தது. கூட்டமும் குறைந்திருந்தது. காற்று சன்னமாக வீசிச் சென்றது.
அடுத்த இரயில் வருப்போகும் அறிவிப்பை, தலைக்குமேல் இருந்த ஒலிப்பெருக்கி சொல்லியது.
கண்கள் தாமாக இரயில் வரும் திசையில் திரும்பின.
தூரத்தில் ஒரு புள்ளிபோலத் தெரிந்தது இரயில்வண்டி.
வெறித்த பார்வையோடு நின்றவளது கால்கள், தாமாக நகர்ந்தன.
ஓர் அடி. முதல் அடி. இடது கால்.
இரயில் அதிவேகமாய் வந்துகொண்டிருந்தது.
'அப்பாவிடம் போய் எப்படிச் சொல்வது, கல்லூரி மாணவர்களின் நலனுக்காகப் போராடி, என் எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டேன் என்று?'
அடுத்த அடி. வலது கால்.
இரயில் நடைமேடையை நெருங்கிவிட்டது.
'நம்பினாரே நம்மை!? மகள் படித்து நல்ல உத்தியோகம் பெற்றுத் தன்னைக் காப்பாற்றி விடுவாளென நம்பினாரே!! எப்படி அந்த நம்பிக்கையை உடைப்பேன்?? எந்த முகத்தோடு சென்று அவரைப் பார்ப்பேன்??'
இன்னொரு அடி. இடது கால்.
ஐம்பதடித் தொலைவில் இரயில் இருந்தது. நான்கே நொடிகளில் அவளை அடைந்துவிடும் வேகத்தில் அது வந்தது.
'இன்று சொன்ன பொய்யின் ஆயுட்காலம் எத்தனை நாள்?? அடுத்து மீண்டும் கேட்டாரென்றால் என்ன சொல்லுவேன் அவரிடம்? வேலை கிடைக்காமல் திண்டாடும் லட்சக்கணக்கான இந்திய மாணவர்களில் நானும் ஒருத்தியா?'
அடுத்த அடி. நடைமேடை முடிந்துவிட்டது. விளிம்பில் நின்றன கால்கள்.
'தோற்றுப் போய்விட்டோமா? வாழ்க்கையில் இனி நமக்கென்று எதுவும் இல்லையா? முடிந்துவிட்டதா? தனியாகிவிட்டோமா? நமக்கென யாரும் இல்லையா? தவறிவிட்டோமா? வழிமாறிவிட்டோமா? தோற்றுவிட்டோமா??'
இரயிலில் விழப்போன சமயம், "சுகாசினி!" என்றவாறு ஒருவன் அவளைப் பிடித்துப் பின்னால் இழுக்க, சட்டென சுயநிலை திரும்பினாள் சம்யுக்தா. மறுகணம் இரயில் தடதடவென்ற ஓசையோடு அவளைத் தொட்டுவிடும் தூரத்தில் தாண்டிச்சென்று நின்றது. ஒருகணம் தான் என்ன செய்யவிருந்தோமெனப் புரிந்தபோது, அதிர்ச்சியாய் நிமிர்ந்தாள் அவள்.
நெஞ்சில் கைவைத்து, படபடவெனத் துடித்த இதயத்தை சாந்தப்படுத்த முயன்றாள் அவள்.
'ஒண்ணுமில்ல.. எதுவும் ஆகல. எல்லாம் சரியாகிடும்..'
தன்னைப் பிடித்து உரிமையாக இழுத்த அந்த ஆடவனைத் திரும்பிப் பார்த்தாள் சம்யுக்தா.
தன்னைவிட ஒரு அங்குலம் உயரமாக இருந்தான். பணக்காரக் களை முகத்திலேயே தெரிய, இஸ்திரி செய்யப்பட்ட வெள்ளை சட்டையும் ஜீன்சும் அணிந்து, சட்டைப் பாக்கெட்டில் குளிர்கண்ணாடியும் வைத்திருந்தான் அவன். தோளில் ஒரு புத்தகப்பை தொங்கியது.
அவளைப் பார்த்ததும் அவனும் அதிர்ச்சியானான். "ஐம் சாரி.. நான்... நீங்க... அது வந்து.." எனத் திணறியவன், அவளைக் கவனமாக மேலும் கீழும் பார்த்தான். கண்களில் குழப்பம்.
பின் பெருமூச்சுடன், "ஐம் ரியலி சாரி... நான் வேணும்னு பண்ணல. தெரியாம உங்களைப் பிடிச்சு இழுத்துட்டேன். சாரி.. பின்னால இருந்து பார்த்தப்ப, எனக்குத் தெரிஞ்ச ஒரு ஆள் மாதிரியே நீங்க இருந்தீங்களா... அதான்.." என அவன் விளக்கிட, சம்யுக்தா புரிந்துகொண்டாள், அவன் தெரியாத்தனமாக வந்துதான் தன்னைக் காப்பாற்றியிருக்கிறான் என்று.
'போயும் போயும் ஒரு நேர்காணலில் தோற்றதற்கே மனது இத்தனை பலவீனமாகிவிடுமா?? அவசரப்பட்டிருந்தால் நாளை அப்பாவை யார் பார்ப்பார்? ஒருநொடியில் வாழ்க்கையைத் தொலைத்துவிட இருந்தாயே சம்யுக்தா! உன் சுயநல முடிவால் நாளை வேதனைப்பட்டு அழப்போவது உன் தந்தையல்லவா? நல்லவேளையாகக் காப்பற்றப்பட்டாய்! அதுவும் எவ்வித அவமானங்களும் இன்றி. கடவுள் செயல்தான்!'
விதியை நினைத்து உள்ளுக்குள் சிலிர்த்தவள், முகத்தில் அதையெதையும் காட்டாமல், சலனமின்றி எதிரில் நின்றவனை நோக்கித் தலையசைத்தாள்.
"நோ ப்ராப்ளம்."
எங்காவது சென்று தலையில் நன்றாகத் தன்னையே அடித்துக்கொள்ள வேண்டும்போல இருந்தது. எதிரில் நின்றவன் நகரட்டும் எனக் காத்திருந்தாள் அவள். ஆனால் அவன் விலகவில்லை. அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றான்.
"உங்களுக்கு சுகாசினின்னு யாரையாச்சும் தெரியுமா?"
சம்யுக்தா மறுப்பாகத் தலையசைத்தாள். அவளுக்கு அங்கே நிற்கவே பிடிக்காமல், சலிப்பாக நகர முயல, அவனும் அவள்பின்னால் வந்தான்.
"ஹலோ, எக்ஸ்க்யூஸ்மீ! ஒரு நிமிஷம்.."
"என்ன?" சுள்ளென எரிந்து விழுந்தாள் அவள்.
அவன் அப்பாவித்தனமாகக் கையை விரித்தான்.
"நத்திங், ஒரே நிமிஷம் உங்க கூட பேசணும். அவ்ளோதான். பேசலாமா?"
சம்யுக்தா புருவம்தூக்கிப் பார்த்தாள். அவனது முகத்திலிருந்து எதையும் கணிக்க முடியவில்லை அவளால். மறுப்பதற்குக் காரணங்கள் தோன்றாததால், சரியென நின்றாள்.
"என்ன?"
"மை நேம் இஸ் தினேஷ். ஐஐடி மெட்ராஸ்."
கைகுலுக்கக் கைநீட்டினான் அவன். சம்யுக்தாவும் தயக்கமாக அதைப் பற்றிக் கைகுலுக்கினாள்.
"சம்யுக்தா. எம்.ஐ.டி."
"வாவ்.. நீங்களும் இன்ஜினியரா??"
"ஏன், இருக்கக் கூடாதா?" சற்றே வேகமாகக் கேட்டாள் அவள். காலை நடந்த நேர்காணலின் பிரதிபலிப்பு அது.
அவன் அதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. தன் கைபேசியில் அவசரமாக எதையோ தட்டச்சு செய்துகொண்டே பேசினான் அவன்.
"ஹான், ஷ்யூர்! ஒரே நிமிஷம்.."
அவள் எதிர்பாராத நேரம் கையைப் பிடித்து ரயிலில் அவன் ஏற்ற, அவள் திடுக்கிட்டு உறைந்தாள்.
அதுதான் அவன் போகவேண்டிய ரயில் போலும், வேகமாக அதில் ஏறிக்கொண்டவுடன் இரயிலும் கிளம்பிவிட்டது.
சம்யுக்தா செயலற்றுப்போய் திகைப்பில் நின்றாள் சில நொடிகள். பின் ஆத்திரம் பொங்க, "வாட் தி ஹெல்!?" என இரைய, அவனோ இலகுவாகக் கையை விரித்தான்.
"என்னை நம்புங்க, நீங்க கண்டிப்பா ஒரு இடத்துக்கு வந்தே ஆகணும் என்கூட!"
மீண்டும் குழப்பமும் எரிச்சலும் உள்ளுக்குள் எழுந்தன. தான் எதற்கு அவன் சொல்லும் இடத்திற்குச் செல்லவேண்டும் என்று கோபமானவள், அவனிடமிருந்து விலக முயன்றாள். ஆயினும் உள்மனது தடுத்தது. தெரிந்தோ தெரியாமலோ தன்னைக் காப்பாற்றிய காரணத்திற்காகவேனும், அவன் சொன்னதை செய்யச்சொன்னது.
அவளுக்குள்ளும் ஒரு ஆர்வம் முளைத்திருந்தது. இம்மாதிரி சந்திப்புகள் என்றுமே நிகழ்ந்ததில்லை. அத்தோடு இவனைப் பார்த்தாலும் ஆபத்தானவன் போலத் தெரியவில்லை.
அரைமணி நேரத்தில் அடையாரில் வந்து இறங்கியபோது, ஆர்வமும் பயமும் சரிவிகிதத்தில் இருந்தன அவளுக்கு. அவனருகே நடந்து சென்று, அவன் காட்டிய காபிக் கடைக்குள் நுழைந்தாள் சம்யுக்தா.
சிறிய கடைதான். எனினும் அழகாக இருந்தது. இளஞ்சிவப்பு நிறத்தில் மேசைகளும் நாற்காலிகளும் இட்டு, ஆங்காங்கே கண்ணாடி விளக்குகளும் பூந்தொட்டிகளும் வைத்து அலங்கரித்து, இளைஞர் கூட்டத்ததை ஈர்க்க முனைந்திருந்தனர் உரிமையாளர்கள்.
எதையோ தேடிய தினேஷின் கண்கள் பூந்தொட்டிகளை ஒட்டிய நான்காவது மேசையில் சென்று நின்றன. அங்கே ஒரு இளம்பெண் அவர்களுக்கு முதுகுகாட்டியபடி அமர்ந்திருக்க, தினேஷ் விரைந்தான் அவளை நோக்கி. சற்றே யோசனையாக அவன்பின் சென்ற சம்யுக்தா, அருகே சென்று அப்பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் திகைத்தாள்.
கண்ணாடியில் தன்னைப் பார்ப்பதுபோல, தன்னையொத்த உருவத்தோடு இருந்த அந்த இளம்பெண் சம்யுக்தாவைக் கண்டதும் வியப்போடு புன்னகைத்தாள்.
"மை காட்.."
கிட்டத்தட்ட சம்யுக்தாவின் சாயலிலேயே இருந்தாள் அப்பெண். சிற்சில வேறுபாடுகளைத் தவிர, தனது சகோதரி என்றால் எவரும் நம்பிவிடுமளவு இருந்தது அவர்களது உருவ ஒற்றுமை. அதை நம்பமாட்டாமல் கண்கள் விரித்து வாய்பிளந்தாள் அவள்.
அவளது திகைப்பை எதிர்பார்த்ததுபோல் புன்னகைத்தான் தினேஷ்.
"என்ன சம்யுக்தா, சர்ப்பரைஸ் ஆனீங்க தானே? நான் கூட்டிட்டு வந்த காரணம் ஓகேவா?"
"இது...?" என்றாள் சம்யுக்தா அவளைக் காட்டி.
"மொதல்ல உக்காருங்க. சுகா, நான் சொன்னன்ல? உன்னை மாதிரியே இருக்கா பாரு! திஸ் இஸ் சம்யுக்தா ஃப்ரம் எம்.ஐ.டி."
அறிமுகம் செய்தவாறே அப்பெண்ணில் அருகில் அமர்ந்து அவளது தோளில் கைபோட்டுக்கொண்டான் தினேஷ்.
கைநீட்டி அவளது கையைப் பிடித்துக் குலுக்கினாள் அப்பெண். கண்ணில் அப்பாவித்தனம் கொஞ்சம் நிறையவே தெரிந்தது.
"இவன் ஃபோன்ல சொன்னப்ப நான் நம்பல. பட் இப்ப என் கண்ணாலயே பாக்குறேன். என்னவொரு சிமிலாரிடி!! அப்படியே சிஸ்டர்ஸ் மாதிரி!? ஹாய், ஐம் சுகாசினி!"
"சுகாசினி என்னோட க்ளாஸ்மேட், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்கறா. என்.ஆர்.ஐ." என விளக்கினான் தினேஷ்.
சுகாசினி மட்டற்ற ஆச்சரியத்தோடு இவளிடம் திரும்பினாள்.
"அமேசிங்!! இவ்ளோ உருவ ஒற்றுமை அக்கா தங்கச்சிகளுக்கு கூட இருக்க வாய்ப்புக் கம்மி. ஆச்சரியமா இருக்குல்ல? நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் துபாய், பாம் ஜுமைரால. அப்பா,அம்மா அங்கதான் இருக்காங்க. என்.ஆர்.ஐ சீட்ல எனக்கு ஐஐடி கிடைச்சுது. சும்மா பார்க்கலாம்னு வந்தேன், ஆனா காலேஜைப் பாத்ததும் பிடிச்சிருந்தது, அதான் சேர்ந்துட்டேன். ஆனா... ஹாஸ்டல் ஒத்துக்கல எனக்கு. அதான், பக்கத்துலயே ஒரு அபார்ட்மெண்ட்டை வாங்கிட்டார் டாடி. எனக்கு ஹெல்ப்பா ஒரு வேலைக்கார அம்மாவும் அவங்களோட பொண்ணும் இருக்காங்க. கொஞ்சம் சிரமம்தான், ஆனா அட்ஜஸ்ட் பண்ணிக்க பழகிட்டேன். லைஃப்னா அதுதான? கொஞ்சம் சகிச்சுக்கறது..?"
சம்யுக்தாவிற்குத் தனது அருகிலிருந்தவளின் அந்தஸ்து ஓரளவு தெளிவாகவே புரிந்தது. இவள் தன்னைப் போன்ற மத்தியதர குடும்பம் இல்லை; நிறையவே வசதி படைத்தவள் என உரைத்தது. அதனால் எழுந்த தயக்கத்தை உடனே கட்டுப்படுத்தியவள், மரியாதைக்காக மட்டும் புன்னகைத்தாள்.
ஆனால் சுகாசினிக்கு எவ்விதத் தயக்கமும் இருக்கவில்லை சம்யுவிடம் பழக. பேசிய பத்தே நிமிடத்தில் கைபேசி எண்ணை வாங்கிக்கொண்டாள். சமூக வலைத்தளங்கள் உள்ளதா என விசாரித்து, இல்லை என்றதும் குறைப்பட்டாள். மெனு கார்டில் பாதியை ஆர்டர் செய்து, அன்போடு அவளிடம் நீட்டினாள் சாப்பிடச் சொல்லி.
அவளும் தினேஷும் சிரிக்கச் சிரிக்கப் பேசி விளையாடி சூழலை இலகுவாக்க, சம்யுவின் தயக்கம் கொஞ்ச கொஞ்சமாகக் கரைந்தது. தராதரமெல்லாம் யோசிக்காமல், வெறும் நட்பை மட்டும் எதிர்பார்க்கும் சுகாசினியின் குணம் பிடித்திருந்தது. உருவ ஒற்றுமை வேறு மனதில் இன்னும் வாஞ்சையை வளர்க்க, தனது உடன்பிறவா சகோதரியாகவே அவளை நினைத்துக்கொள்ளத் தொடங்கினாள் அவளும்.
ஆனால் அவளிடம் தினேஷின் அருகாமையும் நெருக்கமும் சராசரிக்குச் சற்றே அதிகமாக இருப்பதையும் அவளது மூளை கவனித்தது. இருவரையும் கணக்கிடும் பார்வை பார்ப்பதை தினேஷ் கவனித்துச் சிரித்தான்.
"நீங்க ஷார்ப் தான் சம்யுக்தா! கரெக்டா தான் யோசிக்கறீங்க.."
சம்யுக்தா திகைப்பாக சுகாசினியைப் பார்க்க, அவளும் சிரித்தாள்.
"தினேஷ் என்னோட பாய்ஃப்ரெண்ட். ஒரு வருஷமா லவ் பண்றோம்."
Write a comment ...